இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், 70, தன் அலுவல்களை நேற்று துவக்கினார்.
முதல் நாளிலேயே பாக்., அரசு ஊழியர்களுக்கான இரண்டு நாள் வார விடுமுறையை ஒரு நாளாக குறைத்ததுடன், அலுவலக நேரத்தையும் மாற்றி உத்தரவிட்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது.
இதையடுத்து பாக்.,கின் 23வது பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாக்., பிரதமராக மூன்று முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான இவர், பஞ்சாப் மாகாண முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.
புதிய பிரதமராக தன் அலுவல்களை துவக்கிய ஷெபாஸ், காலை 8:00 மணிக்கே அலுவலகம் வந்தார். அந்நாட்டில் அரசு அலுவலர்கள் பணி நேரம் காலை 10:00 மணிக்கு துவங்கும் என்பதால், மற்ற அரசு ஊழியர்கள் அந்நேரம் அலுவலகம் வரவில்லை. பொறுப்புக்களை ஏற்றவுடன் அரசு ஊழியர்களின் பணி நேரத்தை காலை 10:00 மணியில் இருந்து 8:00 மணியாக மாற்றி உத்தரவிட்டார்.அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு நாள் வார விடுமுறையை ஒரு நாளாக குறைத்து உத்தரவிட்டார்.
பிரதமர் அலுவலக ஊழியர்களுடன் உரையாடுகையில், ‘மக்களுக்கு சேவையாற்றவே நாம் இங்கு இருக்கிறோம். ஒரு நொடியைக் கூட வீணடிக்க கூடாது. ‘நேர்மை, வெளிப்படைத் தன்மை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு நம்மை வழிநடத்தும் கொள்கைகளாக இருக்க வேண்டும்’ என, அவர் கூறியதாக தகவல் வெளியானது.
மேலும், குறைந்தபட்ச ஊதியத்தை 25 ஆயிரமாக நிர்ணயித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் உடனான அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
அமைச்சரவையை இறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பதவியேற்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர், மறைந்த பெனசிர் புட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் புட்டோவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி தரப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த கட்சியைச் சேர்ந்த ஏழு பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என, பாக்., அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மோடிக்கு நன்றி!
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஷெபாஸ் ஷெரீப் நேற்று வெளியிட்ட அறிக்கை:வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது.
ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தவிர்க்க முடியாதது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தான் செய்த தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. அமைதியை பாதுகாப்போம், மக்களின் சமூக -பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.