புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 2-வது முறை வெற்றி பெற்றதற்கு பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆட்சி மன்ற குழுவில் 2 உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மறைந்த பிறகு அந்த இடங்கள் காலியாகவே உள்ளன. அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளன. கட்சியில் செல்வாக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் இல்லாததால், அந்த இடங்கள் காலியாகவே உள்ளன என்று காரணம் கூறப்படுகிறது.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது பாஜக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். தற்போது 71 வயதாகும் பிரதமர் மோடி, 2024 மக்களவை தேர்தலில் 3-வது முறை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது உறுதியாகவில்லை.
ஏனெனில், வயது முதிர்ந்த தலைவர்களுக்கு கட்சியில் பதவி அளிப்பதில்லை என்ற கொள்கையை பாஜக உறுதியாக கடைபிடித்து வருகிறது. இதன் காரணமாகவே மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 75-க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி இடமளிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதேபோல் 75 வயது முடிந்த கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் மத்திய அமைச்சர் பதவியை இழந்தனர். எனினும், பிரதமர் மோடி விஷயத்தில் 2024 தேர்தலுக்கு சற்று முன்பாக என்ன நிலை என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பிரதமர் மோடியை யாரும் கட்டாயப்படுத்தும் வாய்ப்புகள் இல்லை. ஆனால், பாஜக கட்சி மற்றும் பதவியில் இருந்து விலகும் முடிவை அவராகவே எடுத்து திடீரென அறிவிப்பார் என்று பாஜக.வில் ஒரு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். இந்த சூழலில், பாஜக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சேர்க்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி ஆட்சி மன்ற குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டால், 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளாராகவும் வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமர் வேட்பாளர் பட்டியலில் ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், உ.பி.யில் 2-வது முறை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஆதித்யநாத் துறவியாகவும் உள்ளார். அவர் இந்துத்துவா கொள்கையை உறுதியாக கடைபிடிப்பார் என்று பாஜக.வின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கினரும் கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய மாநிலங்களில் அதிகமாக 80 மக்களவை தொகுதிகளை கொண்டது உ.பி. இந்த மாநிலத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறை கட்சியை பெற செய்து முதல்வராகி ஆதித்யநாத் சாதனை படைத்திருக்கிறார். எனவே, பிரதமர் வேட்பாளராக ஆதித்யநாத்தை அறிவிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று பாஜக.வினர் கூறுகின்றனர். இவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், உ.பி.யின் 80 தொகுதிகளில் பெரும்பாலானவை மீண்டும் பாஜக வசமாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.