நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் அங்கீகரித்துள்ளன.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது ‘இரவின் நிழல்’ படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்தப்படம், ஆசியாவிலேயே முதன்முதலாக சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி சாதனையாக திட்டமிட்டார். அதற்காக, பல நாட்கள் பயிற்சி எடுத்து அரங்குகள் அமைத்து படமாக்கினார். படத்தின் வேலைகளை முடித்த பார்த்திபன் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தார்.
அந்தப் படத்தை பார்த்த ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினர், “இது ஒரே ஷாட்டில் எடுத்த படம் கிடையாது” என்று கூறியதோடு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்புகள் ’இரவின் நிழல்’ படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என அங்கீகரித்துள்ளன.
”இந்த கருத்து எனக்கு கிடைத்த வெற்றி. அந்த அளவிற்கு நேர்த்தியாக ஒரே ஷாட்டில் படம் ஆக்கியுள்ளேன் என்பது மகிழ்ச்சி. தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இந்த இரு அமைப்புகளுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.