பால் வளத்துறை நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் மாநில நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, பால்வளத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரது அலுவலகங்களுக்கு நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, கடந்த 2008ம் ஆண்டு முதல், பால்வளத்துறை நலவாரியம் அமைக்கு வேண்டும், பால் விலை நிர்ணய ஒழுங்கு முறை ஆணையம் அமிக்க வேண்டும் என்றும்,
ஆவின் பால் உற்பத்தியை அதிகப்படுத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும், ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாக தெரிவித்தார்.
தங்களது கோரிக்கை நீண்ட நாள் கோரிக்கை என்பதால் தமிழக முதல்வர் அதனை விரைவில் நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் பொன்னுசாமி தெரிவித்தார்.