சென்னை:
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்திய மடத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது குறித்து சட்டசபையில் பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, அயோத்திய மடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகாரின்படி, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக தெரியவந்ததாகவும், அதற்காக கடந்த 2013-ம் ஆண்டு, சிவசுப்ரமணிய கோவில் செயல் அலுவலர், இந்த அயோத்தி மண்டபத்தின் தக்கராக நியமிக்கப்பட்டார் என்றும், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இதனால், தக்கர் நியமனம் செல்லும், இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள், ஸ்ரீராம சமாஜத்திற்கு சென்று ஆய்வு நடத்த முற்பட்டபோது, அங்கிருந்த 50-60-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக சேர்ந்து பூட்டுபோட முயன்றதாக கூறிய அவர், இவர் சார்ந்த கட்சி (பாஜக) தலைவர் தலைமையில் அங்கு கூடியதாகவும், சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகவும், அங்கு திருமண மண்டபம், காரிய கொட்டகை ஆகியவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்ததாகவும், குறிப்பாக இந்தியாவிலேயே குளுகுளு ஏ.சி. வசதியுடன் உள்ள காரிய கொட்டகை அங்கு தான் உள்ளது என்றும், ஒரு சதுர அடிக்கு 60 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் ஒரு குறிப்பிட்ட கும்பல் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் கும்பல் என்று கூறிய வார்த்தை சரியானதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பதில் அளித்து பேசியதாவது:-
பேரவைத் தலைவரே இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது. இன்று அதிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.
இருந்தாலும், பா.ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.
சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதே போன்று, கியாஸ் சிலிண்டர் விலை, இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிடத்திலே, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன்.
எனவே, அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். எனவே, தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.