மணிலா,
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நேற்றுமுன் தினம் ‘மேகி’ என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்துவாங்கியது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது. 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைசில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலு, வெள்ளம், நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.