ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளிப்கார்ட் டெலிவரிபாயிடம் , மனைவியை பேசவைத்து கவனத்தை திசை திருப்பிய கணவர், பார்சலில் இருந்து லேப்டாப் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை மாற்றி விட்டு பார்சலில் மரக்கட்டையை வைத்து மோசடி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பிளிப்கார்ட்டுக்கு பல்பு கொடுத்து விட்டு தலைமறைவான கேடி தம்பதியின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா.
இந்நிலையில் கார்த்திக், பிளிப்கார்ட்டில் 44 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், 44,900 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி மறறும் 546 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் என மூன்று பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்து இருந்தார்.
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டுவரும் இன்ஸ்டா கார்ட் நிறுவனம் தான் டெலிவரி மற்றும் ரிட்டர்ன் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரியும் நவீன்என்பவர் சம்பவத்தன்று கார்த்திக் ஆர்டர் செய்த மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட மூன்று பொருட்களுக்கான பார்சல்களையும் வேலம்பாளையம் பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.
அப்போது கார்த்திக் மனைவி ராதிகா வீட்டிற்கு வெளியே வந்து நவீன் கொண்டு வந்த மூன்று பொருட்களையும் பெற்று தனது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பி விட்டு டெலிவரி பாய் நவீனிடம் சுமார் 30 நிமிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் கார்த்திக் மூன்று பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு தன்னால் , ஆன்லைன் பேமெண்ட் செய்ய முடியவில்லை என்று கூறி அதற்கான தொகை ரூ.546 மட்டும் கொடுத்து விட்டு நாளை பேமென்ட் செய்து மற்ற இரண்டு பொருட்களை பெற்றுக் கொள்வதாக கூறினார்.
பின்னர் நவீன் மற்ற டெலிவரி களை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் உயரதிகாரியிடம் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சிசிடிவி முன்பு வைத்து அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண மலிவான பழைய வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் கார்த்திக் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டபோது கார்த்திக்கின் மனைவி ராதிகா முன்னுக்குப்பின் முரணாக பேசி விரட்டி உள்ளார்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசில் பிரவரி மாதம் 5 ந்தேதி புகார் செய்தனர். அதன்பேரில் மலையம்பாளையம் போலீசார் இதுகுறித்து கார்த்திக் மற்றும் ராதிகா மீது 12ந்தேதி வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை தேடி வீட்டிற்கு சென்றனர். அவர்களது வீடு பூட்டிக்கிடந்தது. அதற்குள்ளாக உஷாரான அந்த கேடி ஜோடி தப்பி சென்று விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக் ராதிகா குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த கார்த்திக் , அதே நிறுவனத்தில் வேலைபார்த்த ராதிகா என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளான்.
இவர்கள் காப்பீடி மற்றும் வங்கி கடன் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுபவத்தில் எளிதாக போலி ஆவணங்களை தயார் செய்து மோசடி செய்துள்ளதாக கோவை , மதுரை , சென்னை போன்ற இடங்களிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. கார்த்திக், ராதிகா தம்பதி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ராதிகாவை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். போலீசிடம் சிக்காமல் கார்த்திக் தலைமறைவாகி விட்டார்.
அவரை பிடிக்க சென்னை போலீஸ் தேடிவரும் நிலையில் மற்றொரு பக்கம் தற்போது மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.