பாட்னா: பிஹார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் அமியாவார் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான 60 அடி நீள இரும்புப் பாலம் இருந்தது. இது 500 டன் எடை கொண்டதாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தை சிலர் ஜேசிபி வாகனம், கேஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து சென்று விட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
திருட்டு வழக்கில் நேற்று 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நீர்ப்பாசனத்துறை ஊழியர் அரவிந்தகுமார், துணை வட்ட அதிகாரி ராதே ஷியாம் சிங் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த இரும்புப் பாலத்தை வெட்டியெடுத்து திருட்டை நடத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஜேசிபி வாகனம், கார், கேஸ் கட்டர்கள், திருடு போன இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நஸ்ரிகஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவுக்கு ரோக்தாஸ் போலீஸ் எஸ்.பி. ஆசிஷ் பாரதி பாராட்டு தெரிவித்தார்.