மாணவர்கள் பி.காம், பி.எஸ்சி, என இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் படித்து இரட்டைப்பட்டம் பெற வகைசெய்யும் திருத்தங்களை யுஜிசி அமலுக்கு கொண்டு வருகிறது.
இந்தியா முழுவதும் தற்போதுள்ள நடைமுறைப்படி ஒரே காலகட்டத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை மட்டுமே படிக்க முடியும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை படிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இளநிலை பட்டப்படிப்புகள் அல்லது இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் அல்லது இரண்டு டிப்ளமோ படிப்புகளை படித்து ஒரு பட்டம் பெறும் அதே காலகட்டத்தில் இரண்டு பட்டங்களைப் பெற முடியும்.
தொழில்நுட்ப படிப்புகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. மனிதவியல், அறிவியல், வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் மட்டுமே இந்த இரட்டைப் பட்டங்களைப் பெற முடியும். பி.காம், பி.எஸ்சி ஆகிய இரண்டு படிப்புகளை மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து இரண்டு பட்டங்களையும் பெற முடியும். இரண்டு பட்டங்களையும் நேரடி வகுப்பு அல்லது ஒன்று நேரடி வகுப்பு ஒன்று ஆன்லைன் அல்லது இரண்டும் ஆன்லைன் என எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி மையங்கள் கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவை விரும்பினால் மாணவர்கள் இரட்டைப்பட்டம் பெற அனுமதிக்கலாம். அதற்கான நுழைவுத்தேர்வு, சேர்க்கை விதிமுறைகளை அந்தந்த கல்வி மையங்களே முடிவு செய்யலாம். தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் சியுஇடி நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கலாம். வருகை சதவீதத்தையும் சம்பந்தப்பட்ட கல்வி மையங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். இந்த புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.