கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. முககவசம் கட்டாயமில்லை என்று பல மாநிலங்கள் அறிவித்துவிட்டன.
இதற்கிடையே ஜூன் மாதம் கொரோனா 4-வது அலை தாக்கம் இருக்கும் கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் 4-வது அலைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சில நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
மராட்டியம் மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கு எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதை மறுத்து இருந்தது.
இந்தநிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்ட் வியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய நிபுணர்கள் மற்றும் உயர் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிதி அயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், சுகாதார செயலாளர் ராஜேஷ்பூஷன், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா, என்.டி. ஏ.ஜி.ஐ.யை சேர்ந்த டாக்டர் என்.கே. அரோரா மற்றும் உயர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய மந்திரி ஆலோசனை நடத்தினார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எக்ஸ்.இ. வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது பற்றியும், அப்படி பரவினால் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
புதிய வகை வைரசால் பாதிக்கப்படுபவர்கள் பற்றியும், பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்வது பற்றியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் மத்திய மந்திரி உத்தரவிட்டார்.
கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருந்துகள் கிடைப்பதை தொடர்ந்து ஆய்வு செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார். மேலும் தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி பிரசாரம் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புதிய வகை வைரஸ் தொடர்பாக மாநில அரசு களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கிறது.
இதையும் படியுங்கள்.. நிலைமை சீரானபின் கடனை திருப்பி செலுத்துவோம்- இலங்கை மத்திய வங்கி