புதுச்சேரி: புரட்சிக்கவிஞர் பாவேந்தருக்கு மணிமண்டபம், நூலகம் அமைக்கக்கோரியும், அவரது பிறந்தநாளான ஏப்ரல் 29-ம் தேதியை தமிழ்மொழி நாளாக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு பாரதிதாசன் பேரன் பாரதி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக பாரதி இன்று கூறியதாவது:
“புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு வரும் ஏப்ரல் 29ம் தேதி 132ம் பிறந்தநாளாகும். வரும் 21ம் தேதி பாரதிதாசனின் நினைவுநாளாகும். புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்திருந்தாலும் அவர் தமிழ் மொழி, தமிழ் இனம், திராவிடர் மேன்மை, பகுத்தறிவு என பல படைப்புகளை படைத்துள்ளார். பாவேந்தர் தனது கடைசி காலத்தில் சென்னை தியாகராய நகரில் வசித்தார்.
அங்குதான் காலமானார். அவர் நினைவாக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளது. அவர் பெயரில் உயர் விருது வழங்கப்படுகிறது. எனினும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அவர் புகழ்ப்பரப்பும் வகையிலும் மக்களுக்குப் பயன்தரும் வகையிலும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டபம் அமைய வேண்டும். அவரின் பிறந்தநாளான வரும் 29ம் தேதி அவருக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பது பொருத்தமாக இருக்கும்.
அதேபோல் பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் மிகப்பெரிய நூலகத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த நூலகம் பாரதிதாசன் வாழ்ந்த புதுச்சேரி அருகில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அமைக்கலாம்.
வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29ம் தேதியை தமிழ்மொழி நாளாக அறிவிக்கவேண்டும். இது தமிழறிஞர்களின் விருப்பம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.