மும்பை:
ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்னும், மொயீன் அலி 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய உத்தப்பா, ஷிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். உத்தப்பா 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார். ஷிவம் துபே 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரூ அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்ததால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
டூ பிளசிஸ் 8 ரன், அனுஜ் ராவத் 12, விராட் கோலி 1, மேக்ஸ்வெல் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். பிரபு தேசாய் அதிரடியாக ஆடி 18 பந்தில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஷபாஸ் அகமது 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் போராடினார். அவர் 14 பந்தில் 31 ரன் அடித்து அவுட்டானார்.
இறுதியில், பெங்களுரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படியுங்கள்…மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பாபர் அசாம்