பீகார் மாநிலத்தில் ஒரு மசூதிக்குள் புகுந்த இந்துத்வா கும்பல், அங்கு காவிக் கொடியை ஏற்றிய செயல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ராமநவமி கொண்டாடப்பட்டது. ஆனால் பல வட மாநிலங்களில் இந்த நாளை வன்முறை நாளாக சிலர் மாற்றி விட்டனர். பல இடங்களிலும் மத ரீதியான மோதல் வெடித்துள்ளது. இந்துத்வா அமைப்புகள் நடத்திய வன்முறைச் சம்பவங்களை பலரும் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் ஒரு மசூதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு காவிக் கொடியை ஏற்றி அட்டகாசம் செய்த செயல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பீகாரின் முசாபர்பூர் என்ற இடத்தில் இந்துத்வா அமைப்பினர் ராமநவமியன்று கையில் காவிக் கொடியுடன் ஊர்வலமாக போனார்கள். அப்போது முகம்மது பூர் என்ற இடத்தில் உள்ள டாக் பங்களா மசூதிக்குள் ஒரு நபர் காவிக் கொடியுடன் புகுந்தார். பின்னர் அங்கிருந்த கோபுரத்தில் ஏறி அங்கு காவிக் கொடியை கட்டினார். இதைப் பார்த்து அந்தக் கும்பல் எக்காளமிட்டுச் சிரித்தது, கொண்டாடியது. யாரும் அந்த நபரைத் தடுக்க முயலவில்லை.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக முதுநிலை எஸ்பி ஜெயந்த் காந்த் கூறியுள்ளார். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குஷ்பு கண்டனம்
இந்த சம்பவம் குறித்து
நடிகை குஷ்பு
கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இதுபோன்ற செயல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இதிலும் சிலர் பாஜகவை இழுத்துப் பேசுகிறார்கள். இதுபோன்ற செயல்களை பாஜக ஒரு போதும் செய்யாது. இதை பாஜக ஆதரிக்கவும் செய்யாத். நமது பிரதமர் நரேந்திர மோடி, சமத்துவம், வளர்ச்சி, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை உடையவர் என்று கூறியுள்ளார் குஷ்பு.