மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவாதி தேவா்களை போரில் வென்று கடைசியாக சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.
அவ்வாறு மதுரை நாட்டை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இன்று இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும்.
அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இதையும் படிக்கலாம்…
அஷ்டமி, நவமியில் புது முயற்சி செய்யலாமா?