கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் வேளையில், இப்போதிலிருந்தே கட்சியை பலப்படுத்த, பா.ஜ., மூத்த தலைவர்கள் அடங்கிய மூன்று குழுக்கள், இன்று முதல் மாநில சுற்றுப்பயணத்தை துவக்க உள்ளனர்.பா.ஜ., ஆட்சி கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ., ஆட்சி புரிகிறது.
இதுவரை முழு பெரும்பான்மையுடன் ஒரு முறை கூட ஆட்சிக்கு வரவில்லை.எனவே, தற்போது ஆளும் பா.ஜ.,வினர், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 150ல் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டுள்ளார்.இதையடுத்து, தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் வேளையில், இப்போதிலிருந்தே மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் மூத்த தலைவர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்துக்கு, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையிலான முதல் குழுவில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, சோமண்ணா, மாநில துணை தலைவர்கள் பிரதாப் சிம்ஹா, தேஜஸ்வினி அனந்த்குமார், ராஜேந்திரா உள்ளனர்.சுற்றுப்பயணம் இந்த குழு, இன்றும், நாளையும் மைசூரு மண்டலம்; 19, 20ல் பல்லாரி மண்டலம்; 21, 22ல் தார்வாட் மண்டலம்; 23, 24ல் பெங்களூரு நகர மண்டலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.மேலிட பொறுப்பாளர் அருண் சிங் தலைமையிலான இரண்டாம் குழுவில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், அசோக், தேசிய பொது செயலர் சி.டி.ரவி, மாநில துணை தலைவர்கள் மாலிகையா குத்தேதார், சங்கரப்பா, நந்தீஷ் உள்ளனர்.
இந்த குழு, இன்றும், நாளையும் பெலகாவி மண்டலம்; 19, 20ல் தாவணகெரே மண்டலம் 21, 22ல் பெங்களூரு ரூரல் மண்டலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மூன்றாம் குழுவில், முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அமைச்சர்கள் அஸ்வத் நாராயணா, ஸ்ரீராமுலு, மாநில துணை தலைவர்கள் நிர்மல் குமார் சுரானா, லட்சுமண் சவதி, விஜயேந்திரா, நயனா கணேஷ் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழு, இன்றும், நாளையும் மங்களூரு மண்டலம்; 19, 20ல் ஷிவமொகா மண்டலம்; 21, 22ல் கலபுரகி மண்டலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கவுள்ளனர். மூன்று குழுக்களும் இன்று ஒரே முறை மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், பா.ஜ., தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.ஆலோசனை பெலகாவி சுற்றுப்பயணத்துக்கு புறப்படுவதற்கு முன், பெங்களூரில் எடியூரப்பா நேற்று கூறியதாவது:
சட்டசபை தேர்தல் தயாராகும் வகையில், நாளை முதல் 24 வரை மாநில சுற்றுப்பயணம் மேள்கொள்ளப்படுகிறது. கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி பலப்படுத்தப்படும்.ஹிந்து – முஸ்லிம்கள் ஒரு தாயின் பிள்ளைகள். யாரோ சில விஷமிகள் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தால் எங்கள் பா.ஜ., அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –