சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 28 உறுப்பினர்களைக் கொண்ட மாநில வன உயிரின வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வன உயிரின வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துணைத் தலைவராக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில் 3 எம்எல்ஏக்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 3 பேர், சுற்றுச்சூழல் சார்ந்த வல்லுநர்கள் 8 பேர், அரசுத் துறை அலுவலர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, எம்எல்ஏக்கள் பிரிவில் கம்பம் தொகுதி எம்எல்ஏ என்.ராமகிருஷ்ணன். சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ டி.உதயசூரியன், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரும், தொண்டு நிறுவனங்கள் பிரிவில் ‘நீலகிரி கீ ஸ்டோன்’ அறக்கட்டளையைச் சேர்ந்த பிரதிம் ராய், ‘கோவை ஓசை’ அமைப்பைச் சேர்ந்த கே.காளிதாசன், தேனி நலம் மருத்துவமனை மருத்துவர் சி.பி.ராஜ்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசுத் துறையில் தலைமைச் செயலர், சென்னை மண்டல ராணுவ அதிகாரி, வனத்துறை, கால்நடைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையின் தலைமை வன உயிரின காப்பாளர் இந்த வாரியத்தின் உறுப்பினர் செயலராகச் செயல்படுவார்.
இந்த வாரிய உறுப்பினர்கள், அரசுக்கு வன உயிரின பாதுகாப்பு தொடர்பாக கொள்கைகள் வகுக்க ஆலோசனை வழங்குவதோடு, வனப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், பழங்குடியினருடன் இணைந்து வன உயிரினங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.