கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டிற்கு திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. திருமணத்தேதி தொடர்பாக மாறுபட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. திருமணம் நடக்கப்போவது நிச்சயம் என்பதை உறுதிபடுத்திய இருவரது குடும்பமும் திருமண தேதியை மட்டும் உறுதியாகச் சொல்லவில்லை. ஆரம்பத்தில் இம்மாதம் 17-ம் தேதி என்று செய்தி வெளியானது. பின்னர் 14, 15, 16 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வந்து கொண்டே இருந்தது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமண தேதி குறித்த செய்தி வெளியில் கசிந்ததால் இப்போது மீண்டும் திருமண தேதியை மாற்றி அமைத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு திருமண தேதி மாற்றப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. முன்பு அலியாவின் சித்தப்பா ராபின் பட் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது ஆலியாவின் சகோதரர் ராகுல் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ரன்பீர்-ஆலியா தம்பதி திருமண தேதியை மாற்றியுள்ளனர். முதலில் 14ம் தேதி என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்தி வெளியில் கசிந்ததாலும், பாதுகாப்பு காரணங்களாலும் திருமண தேதி வேறு ஒருநாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருமணம் 13, 14ம் தேதிகளில் நடக்காது. இதுதான் உண்மை. ஆனால் உண்மையில் இத்தேதியில் தான் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நெருக்கடி காரணமாக திருமண தேதி உட்பட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. அதிகமாக 20-ம் தேதி திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்
ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டும் தன்னால் திருமண தேதியை சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூர் திருமண தகவல் தொடர்பாக எதையும் தெரிவிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். எனவே என்னால் எதையும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். அதே சமயம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. செம்பூர் ஆகே ஸ்டூடியோ மற்றும் பாந்த்ராவில் உள்ள ரன்பீர் கபூர் இல்லமான கிருஷ்ண ராஜ் கபூர் பங்களாக்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 45 பேர் வரை பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது கபூர் மற்றும் மகேஷ் பட் குடும்பத்தினர் 28 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று செய்தி வெளியாகி இருக்கிறது. மருதானி வைப்பது, இசைக்கச்சேரி போன்றவையும் ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தை ரன்பீர் இல்லத்தில் நடத்தும் முடிவுக்கு இரு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இத்திருமணம் செம்பூரில் நடக்குமா அல்லது பாந்த்ரா இல்லத்தில் நடக்குமா என்ற குழப்பமும் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த அளவுக்கு ரன்பீர் கபூர் திருமணத்தில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. திருமணம் முடிந்த பிறகு மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பு நடத்தவும் கபூர் குடும்பம் முடிவு செய்துள்ளது. திருமணத்திற்கு சொற்ப எண்ணிக்கையில் விருந்தினர்கள் அழைக்கப்படுவதால் வரவேற்பை பெரிய அளவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.