ஆந்திரா மாநிலம் கெசந்திராபாத்தில் இருந்து, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி புறப்பட்ட
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில்
நேற்றிரவு 10 மணி அளவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பிகாடத்துக்கும், ஸ்ரீ புரப்பள்ளி இடையே சென்று கொண்டு இருந்தது.
இரவு நேரம் என்பதால் பயணிகள் பெரும்பாலோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது ரயில் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததாக தெரிகிறது.
இதனால் திடுக்கிட்ட பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்து விடும் என்ற அச்சத்தில் பயணிகள் அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக ரயிலில் இருந்து கீழே இறங்கினர்.
அப்போது ஒரு சில பயணிகள் அருகில் இருந்த தண்டவாளத்திலேயே நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வருவதை அறியவில்லை.
வேகமாக வந்த ரயில் நொடி பொழுதில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ரயில் சக்கரத்தில் சிக்கி 5 பயணிகள் உடல் துண்டாகி இறந்தனர். உயிருக்கு போராடிய வாலிபர் ஒருவரை மீட்ட போலீசார் அவரை ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்தில் பலியான 5 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர விபத்து குறித்து தகவலறிந்த ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ கேஷ்.பி.லக்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் சிக்கி ஐந்து பயணிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.