இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். உக்ரைனில் நிலவும் போர் சூழ்நிலைகள் குறித்து இந்தியமற்றும் அமெரிக்க அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக உரையாடினார்.
இந்த உரையாடலில் பேசிய மோடி, “உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இந்த சம்பவத்தை நாங்கள் கண்டித்தது மட்டுமல்லாமல் இது குறித்தான விசாரணையை சுதந்திரமாக மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம். இந்த போர் நடவடிக்கை தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசினேன். அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமல்லாமல், புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என பைடனிடம் கூறினார்.
இந்த உரையாடலில் மோடியுடன் பேசிய பைடன், “உக்ரைனின் போர் விளைவுகளை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்தான ஆலோசனையை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளும். மேலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் இந்தியாவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை” என கூறினார்.