பனாஜி: ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் தர்மேஷ் சக்லானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் தர்மேஷ் சக்லானி என்பவர், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அங்கித் ஜஜோடியா என்பவரிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தத்தகுரு சாவந்த் கூறுகையில், ‘தர்மேஷ் சல்கானி மீது புகார் கொடுத்துள்ள ஜஜோடியா, கோவாவின் கடல் பகுதியில் அமைந்துள்ள சூதாட்ட விடுதிகளுக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு வரும் சக சூதாட்ட பிரியர்களுடன் ஜாலியாக சூதாடி வருவார். அவர் நீண்ட காலமாக கோவாவில் வசித்து வருகிறார். இதற்கிடையே ஜஜோடியாவிடம் தர்மேஷ் சக்லானி மற்றும் 5 பேர் ரூ.50 லட்சம் கேட்டு பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவரை மிரட்டி தாக்கியுள்ளனர். அதையடுத்து மிரட்டி பணம் பறித்தல், தவறான முறையில் அடைத்து வைத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தர்மேஷ் சக்லானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடந்த 2021 டிசம்பரில் வழக்கு பதியப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தர்மேஷ் சக்லானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகிறோம்’ என்றார்.