வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றங்சாட்டப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த அவரது நிறுவன அதிகாரி சுபாஷ் சங்கர் பரப் என்பவர் கைது செய்யப்பட்டு எகிப்திலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார்.
பிரபல வைர தொழிலதிபர் நீரவ் மோடி பல்வேறு வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டன் சிறையில் உள்ளஅவரை இந்தியா மீட்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நீரவ் மோடியின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது நிறுவனத்தின் துணை பொது மேலாளர் பதவியில் இருந்த சுபாஷ் சங்கர் பரப் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து தேடி வந்தது. 4 ஆண்டுகள் நீடித்த தேடுதலுக்கு பிறகு சுபாஷ் சங்கர் பரப் எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சட்டம் மற்றும் தூதரக ரீதியிலான நீண்ட முயற்சிகளுக்கு பிறகு சுபாஷ் சங்கர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுபாஷ் சங்கரை, நீரவ் மோடியின் ஆட்களே எகிப்தில் ரகசிய இடத்தில் சட்டவிரோதமாக ஒளித்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுபாஷ் சங்கர் பரப்பிடம் விசாரிப்பது மூலம் வங்கி மோசடி விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்பதுடன், நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவும் என சிபிஐ கருதுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM