வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது

மும்பை:

இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ்மோடி. இவருக்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க, வைர நகை கடைகள் இருந்தன.

இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தார். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார்.

சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்த அவர் பாதி பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தவில்லை. 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அவர் கடன் மோசடி செய்ததாக வங்கிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை அறிந்ததும் நிரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். நிரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்தார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக பணத்தை மீட்பதற்காக அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நிரவ் மோடியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளி சுபாஷ்சங்கர் எகிப்து நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று அவரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கைது செய்தனர்.

நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர். நிரவ் மோடி வழக்கில் சுபாஷ்சங்கர் கைதானது மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

மும்பை அழைத்து வரப்பட்டுள்ள சுபாஷ்சங்கர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிரவ் மோடி நடத்தி வந்த நிறுவனங்களில் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளராக சுபாஷ்சங்கர் இருந்து வந்தார். வைர நகைகளை கோடிக்கணக்கில் கைமாற்றியதில் இவருக்குதான் முக்கிய பங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.