கொழும்பு:’அன்னியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, வெளிநாட்டு கடன்களை திரும்பச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என, இலங்கை அரசு அறிவித்து உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், கொரோனா தாக்கத்தால் சுற்றுலா வருவாய் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது.
இந்தப் பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு கடன் உள்ளது. கடந்த ஜனவரியில், 3,750 கோடி ரூபாய் கடனை திரும்பத் தந்தது. வரும் ஜூலையில் 7,500 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் இலங்கை உள்ளது.இலங்கை, 1948ல் சுதந்திரம் அடைந்த பின் முதன் முறையாக இத்தகைய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
மருந்து தட்டுப்பாடு
கடும் நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பு உள்ள மருந்துகள், இன்னும் சில நாட்களுக்கு கூட வராது என, அரசு மருத்துவர் சங்கம் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தீவிரமான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை, யார் வேண்டுமானாலும் நன்கொடையாக அளிக்கலாம் என, மருத்துவர் சங்கத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா உதவி
இந்தியா, இலங்கைக்கு 11 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன்படி பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இன்று இலங்கையில் சிங்கள புத்தாண்டும் நாளை தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின், 11ஆயிரம் டன் அரிசியை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. கடந்த வாரம் இந்தியா இலங்கைக்கு, 16ஆயிரம் டன் அரிசி அனுப்பியது.
Advertisement