புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்தாலும், ஹரியாணா, டெல்லியில் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், வாராந்திர பாசிட்டிவ் சதவிகிதம் குறைந்துவந்தாலும், ஹரியாணா, டெல்லி,குஜராத் உட்பட சில மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகிறது.
மேலும், கடந்த 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், நாடு முழுவதும் 54 பேர் மட்டுமே தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2020 மார்ச் 23 – 29-ல் ஏற்பட்ட உயிரிழப்பை விட குறைவாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை 10-ம்தேதி கரோனா தொற்றால் டெல்லியில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக பதிவானது. அதேபோல் மேற்கூறிய ஒரு வாரத்தில் 7,100 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவும் கடந்த 2020 ஏப்ரல் 6 – 12 ஆகிய 7 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பை விட மிகக் குறைவானதாகும்.
ஆனால், டெல்லியில் கடந்தவாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 26 சதவீதம் அதிகரித்துள்ளனர். அங்கு ஒரு வாரத்தில் 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தில் 751 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். டெல்லியில் தினசரி பாசிட்டிவ் ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.
அதேபோல் அருகில் உள்ள ஹரியாணாவிலும் தொற்று அதிகரித்துள்ளது. அங்கு கடந்த வாரம் 514 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்தில் 344 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
குஜராத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 115 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு அதற்கு முந்தைய வாரத்தில் 61 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நிலை கடந்த வாரம் 89 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உருமாறிய கரோனா எக்ஸ்இ வைரஸ் சீனா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றஅச்சம் எழுந்துள்ளது. அதற்கேற்ப கரோனா பிரச்சினை முடியவில்லை. எப்போது புதிய வைரஸ் பரவும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் கைவிடக்கூடாது என்று என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தது குறிப் பிடத்தக்கது.