சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக அதிகமான லாபம் ஈட்டி வரும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைக்கவும், அவர்களை ஈர்க்கவும் கார்களை பரிசாக வழங்கி வருகின்றன. ஒரு நிறுவனம் 5 ஊழிர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்கள் வழங்கிய நிலையில் மற்றொரு நிறுவனம் தற்போது ஊழியர்களுக்கு 100 கார்களை வழங்கி அசத்தியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டன.
நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவு குறைந்தது. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.
கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்தனர். ஊழியர்கள் பெருமளவு ராஜினாமா செய்யும் போக்கு இந்த ஆண்டும் தொடர்கிறது. இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டில் எந்த துறையில் அதிகமான வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு இருக்கும் என்ற தகவல் வெளியானது. இந்த ஆண்டு சராசரியாக 9 சதவீத சம்பள உயர்வை நிறுவனங்கள் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐடி உட்பட சில தேவை அதிகமுள்ள நிறுவனங்கள் 25 சதவீதம் வரைக்கூட சம்பள உயர்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. அதுபோலவே ஊழியர்களை ஈர்க்க சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமான லாபம் ஈட்டி வரும் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதிகமான சலுகைளை வழங்கி வருகிறது.
ஐடி பின்னணியைக் கொண்ட மூத்த நிலை பொறியாளர்கள் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் சில வேலைகளுக்கு பேரம் பேசும் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்து இருந்தது. அதுபோலவே ஐடி ஊழியர்களுக்கு தற்போது ஜாக்பாட் அடித்து வருகிறது.
சென்னையை சேர்ந்த கிஸ்ப்ளோ இன்கார்பரேஷன் என்ற ஐடி நிறுவனம் நீண்டகாலமாக பணியாற்றம் தனது ஊழியர்கள் 5 பேருக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சீரிஸ் லக்சரி செடான் கார்களை பரிசளித்துள்ளது.
கிஸ்ப்ளோ நிறுவனத்தின் 10-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த பரிசு சிறந்த ஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் கார் பரிசளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சுரேஷ் சம்பந்தம் கூறுகையில் ‘‘எங்கள் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. எங்கள் ஊழியர்களை நாங்கள் ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைளை செய்து வருகிறோம். அலுவலகத்திற்கு வர விருப்பமில்லை என்றால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்துகொள்ளலாம். அதேபோல ஊழியர்களுக்கு கட்டாய பணி நேரம் உள்ளிட்ட எந்த கட்டுப்பாடும் கிடையாது.
5 பிஎம்டபிள்யூ
எங்கள் நிறுவனம் பிஎம்டபிள்யூ பரிசளித்த 5 ஊழியர்களும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து வருகிறார்கள். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர்கள். அதிலும் சிலர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆவர்’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் சென்னையை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனமான ஐடியாஸ்2ஐடி (Ideas2IT) தனது ஊழியர்கள் 100 பேருக்கு புத்தம் புதிய தலா ஒன்று வீதம் மொத்தம் 100 மாருதி சுஸுகி கார்களை பரிசாக வழங்கியுள்ளது. நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை தொடர்ந்து வழங்கி வருவதால் இந்த பரிசு வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் ஹரி சுப்பிரமணியன் கூறுகையில் ‘‘ஐடியாஸ்2ஐடி என்ற ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு மாருதி சுஸுகி கார்களை பரிசாக வழங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களிடம் பணிபுரியும். 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்குகிறோம். நாங்கள் பெற்ற செல்வத்தை ஊழியர்களிடம் திருப்பித் தருவதே எங்கள் இலக்கு’’ எனக் கூறினார்.
100 கார்கள் பரிசு
ஐடியாஸ் 2ஐடி நிறுவனர் மற்றும் தலைவர் முரளி விவேகானந்தன் கூறுகையில் ‘‘எங்கள் ஊழியர்கள் நிறுவனத்தை மேம்படுத்த அதிகமான உழைப்பை தருகின்றனர். இந்த கார்களை நாங்கள் வழங்கவில்லை, அவர்கள் தங்கள் கடின உழைப்பால் இதனை சம்பாதித்துள்ளனர்.
எங்கள் செல்வத்தை ஊழிர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற உறுதியை பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தோம். அதில் கார் வழங்குவது முதல் படியாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற பல நல்ல முயற்சிகளை தொடர்வோம்’’ எனக் கூறினார்.