கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ராஜா என்கிற கட்டை ராஜாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கட்டை ராஜாவும் அவரது ஆட்களும், செந்தில்நாதனை கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள மாடாக்குடி புதிய பாலம் அருகே வைத்து வெட்டிக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செந்தில்நாதன் கொலை வழக்கில் கட்டை ராஜா உள்பட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு மற்றும் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த செந்தில்நாதன் கொலை வழக்கில் இன்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு கூறினார். கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2-வது குற்றவாளியான மாரியப்பன், 4-வது குற்றவாளியான மனோகரன் ஆகிய இருவரும் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டனர். 3-வது குற்றவாளியான ஆறுமுகம், 5-வது குற்றவாளியான செல்வம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ரவுடி கட்டை ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 14 கொலை வழக்குகளிலும், 3 கொலை முயற்சி வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில்நாதன் கொலை வழக்கு விசாரணையின்போது 18-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடன் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக செந்தில்நாதனை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற கட்டை ராஜாவும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் அரவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. ரவுடி கட்டை ராஜா இது போன்று பணத்துக்காக கொலைகளை செய்பவர் என்கிற குற்றச்சாட்டுகள் விசாரணையின்போது கோர்ட்டில் தெளிவாக எடுத்து கூறப்பட்டது.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை உள்ளிட்டவை தெளிவாக நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டி வாதிட்டோம். கட்டை ராஜாவுக்கு சாகும்வரை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எதிரிகளான ஆறுமுகம், செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் கோர்ட்டு 150 ஆண்டு கால பழமை வாழ்ந்ததாகும். பல்வேறு வழக்குகளில் இத்தனை ஆண்டுகளாக இந்த கோர்ட்டில் பல தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் யாருக்கும் இதுவரை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக இன்று ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கும்பகோணம் கோர்ட்டு வளாகம் மட்டுமின்றி கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்… சொத்துவரி உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து கூறலாம்-மாநகராட்சி