புதுடெல்லி: டெல்லியில் 72.5 மீட்டர் உயரமுள்ள குதுப் மினார் கோபுரம் முஸ்லிம் மன்னர் குத்புதீன் ஐபக் என்பவரால் 1199-ம் ஆண்டு கட்டிடப் பணி ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு பின் வந்த சம்சுதீன் இல்டுட்மிஷ் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் குதுப் மினார், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக 1993-ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் குதுப் மினார் கோபுரத்தையும் அது அமைந்துள்ள வளாகத்தையும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:
குதுப் மினார் கோபுரம் உண்மையில் விஷ்ணு ஸ்தம் பம் (கொடிமரம்). இந்து மற்றும் ஜைன மதத்தின் 27 கோயில்களை இடித்துவிட்டு இந்த குதுப் மினார் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்துக்களை அவமதிக்கும் வகையில் இது கட்டப்பட்டது.
குதுப் மினார் வளாகத்தில் ஏராளமான இந்து கடவுள்களில் உடைந்த சிலைகள் காணப் படுகின்றன. இந்தப் பகுதி கோயிலாக இருந்ததற்கு இதுவே ஆதாரம். அழிக்கப்பட்ட 27 கோயில்களையும் மத்திய அரசு மீண்டும் கட்டித் தர வேண்டும். அங்கு இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு வினோத் பன்சால் கூறினார்.