அகமதாபாத்: இந்திய பால் பொருள் நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்த இலங்கை அரசு, இப்போது தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க உதவுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்திய பால் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை நிறுவனங்கள் தற்போது ஆர்வமாக உள்ளன. இந்திய நிறுவனங்களும் அந்நாட்டுக்குத் தேவையான பால் பொருட்களை விநியோகிக்க தயாராக உள்ளன. ஆனால் அது அவ்வளவு எளிதாக அனுப்ப முடியாது என்றே தோன்றுகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அனைத்து விதமான உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றில் பெரும்பாலானவை இறக்குமதியை நம்பியிருக்கும் உணவுப் பொருட்களாகும். அதில் பிரதானமானது பால் பவுடர். இப்போது இலங்கையில் ஒரு கிலோ பால் பவுடர்விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர பிரிவு மக்களால் பால் பவுடர்வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் இலங்கையின் பால் பொருட்களுக்கான சந்தை 40 கோடி டாலராகும். இதில் பெருமளவு பொருட்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அங்குள்ள வர்த்தகர்கள் இந்திய பால் பொருட்களை தவிர்த்து இவ்விரு நாடுகளின் பொருட்களை வாங்க முடிவு செய்தனர். அதற்கேற்ப அரசியல் ரீதியாக நெருக்குதல் அளித்து இந்திய பால் பொருள் நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டது.
தற்காலிக வாய்ப்பு
இந்தியாவில் பால் பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிப்பது அமுல் நிறுவனமாகும். ஆனாலும் பால் பொருட்களை சப்ளை செய்வதில் சில சிரமங்களும் உள்ளன. பால் உணவுப் பொருட்கள் அல்லது ஸ்கிம்டு பால் பவுடர் உள்ளிட்டவை எனில் அதை சப்ளை செய்வதில் பிரச்சினை இருக்காது. அதேசமயம் இலங்கை பிற நாடுகளுடன் வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) மேற்கொண்டிருந்தால் அப்போது இந்தியாவிலிருந்து சப்ளை செய்ய முடியாது என்று அமுல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பால் கூட்டுறவு கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வந்த இந்தியாவின் தேசிய பால் பொருள் மேம்பாட்டு வாரியத்தை 1990-களில் இலங்கை அரசு வெளியேற்றியது. அப்போதிலிருந்து இந்திய பால் பொருள் தயாரிப்புகள் இலங்கையில் விற்கப்படுவதில்லை.
இலங்கை நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு 100 கோடி டாலர் (ரூ.7,500 கோடி) கடன் அளித்தது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்த கடன் வசதி அளிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி இலங்கை என்டிடிபி பால் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்று வழக்கறிஞரும் பொருளாதார கொள்கை வகுப்பாளருமான விஜய் சர்தானா குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களிலும் முன்பிருந்ததைப் போன்று வர்த்தகம் மேற்கொள்ள முடியாது என்பதை இலங்கை அரசு உணர்ந்தாக வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொண்ட அணுகுமுறையை மாற்றி வரும் காலத்திற்கேற்ப கொள்கைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நெருக்கடி காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திலும் பால் பொருள் சப்ளையை தொடர்வதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை போன்ற நாடு நீண்ட காலத்துக்கு பால் இறக்குமதியை நம்பியிருக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டுதான் இலங்கையில் கூட்டுறவு பால் அமைப்பை வலுப்படுத்தும் பணியை என்டிடிபி மேற்கொண்டது. இதற்காக இலங்கையில் உள்ள கிரியா மில்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தமும் போட்டது. இது ஆரம்பத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டது. ஆனால் உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களால் இதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது என்று என்டிடிபி தலைவர் மீனெஷ் ஷா குறிப்பிட்டார்.
இப்போதைய சூழலில் இரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் ஆலோசித்து முடிவு எடுத்தால் மட்டுமே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பால் பொருள் சப்ளை மேற்கொள்ள முடியும். அதேசமயம் இந்திய நிறுவனங்களும் வர்த்தகம் புரிவதற்கேற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஷா வலியுறுத்தினார்.
இதுவரையில் பால் பொருள் சப்ளை தொடர்பாக என்டிடிபி அல்லது அமுல் நிறுவனத்துக்கு அரசிடமிருந்து எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கிலோ பால் பவுடர் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது.