பீஜிங்:சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்குள்ள அமெரிக்க துணை துாதரகத்தில், முக்கிய ஊழியர்கள் தவிர்த்த பிற ஊழியர்களை வெளியேறுமாறு, அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், ஷாங்காய், ஜில்லின் நகரங்களில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஷாங்காய் நகரில் மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர், ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால், கடுமையான மன உளைச்சலில் அலறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘ஷாங்காயில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் பணிபுரியும் முக்கிய ஊழியர்கள் தவிர்த்த பிற ஊழியர்கள், குடும்பத்துடன் அமெரிக்கா திரும்ப வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது. மேலும், ஷாங்காயில் உள்ள அமெரிக்கர்கள், தங்களிடம் போதிய பணம், உணவு உள்ளிட்ட வசதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், இல்லையெனில் நாடு திரும்புமாறும் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, ஷாங்காயில் உள்ள அமெரிக்க துணை துாதரக ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வெளியேற தயாராகி வருகின்றனர். அவர்களை பத்திரமாக அழைத்து வர, அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கிடையே, அமெரிக்காவின் எச்சரிக்கை, சீனாவை கடுப்பேற்றியுள்ளது. கொரோனா குறித்து, தேவையற்ற பீதியை அமெரிக்கா ஏற்படுத்துவதாக, சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.
Advertisement