அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த கர்நாடக
பாஜக
அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது, தற்கொலைக்குத் தூண்டிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. இவர் எதியூரப்பா காலத்து அரசியல்வாதி. தற்போது எஸ்.ஆர். பொம்மை அரசில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சையாக பேசி சலசலப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்.
முன்பு கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், முன்பெல்லாம் கேரளாவில் ஆர்எஸ்எஸ் கிளையைத் திறந்தால் உடனே வந்து தாக்குவார்கள். அப்போது கட்சித் தலைவர்கள் எல்லாம், தொண்டர்களிடம் அமைதி காக்குமாறு கூறுவார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. நம்முடைய பலம் கூடி விட்டது. யாராவது உங்களைத் தாக்கினால், தாக்கிய தடியைப் பிடுங்கி திருப்பித் தாக்குங்கள் என்று கூறி வருகிறோம். இனிமேலும் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஒன்றுக்கு இரண்டாக அடிப்போம் என்று கூறியிருந்தார். இது கட்சித் தொண்டர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அதேபோல சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் காவிக் கொடி பறக்கும் நாள் வரும் என்று பேசி இன்னொரு சர்ச்சையைக் கிளப்பினார். தேசியக் கொடியை ஈஸ்வரப்பா அவமதித்து விட்டதாக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியது. ஆனால் தான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று பதிலுக்குக் கேட்டார் ஈஸ்வரப்பா.
இப்படிப்பட்ட ஈஸ்வரப்பா தற்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். காண்டிராக்டர் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலகாவியைச் சேர்ந்த காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில், எனது சாவுக்கு முழுக்க முழுக்க காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாதான். அவரால்தான் நான் சாகும் முடிவை எடுத்தேன். எனது மனைவி, குழந்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எஸ்ஆர் பொம்மை, லிங்காயத்து தலைவர் எதியூரப்பா ஆகியோர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.
இந்த தற்கொலை விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் பாட்டீல் மரண வழக்கை பாரபட்சமில்லாமல் நடத்துமாறு முதல்வர் எஸ்.ஆர். பொம்மை உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈஸ்வரப்பா மற்றும் அவரது 2 உதவியாளர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈஸ்வரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து, கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. ஈஸ்வரப்பா மீதான இந்த வழக்கால் பொம்மை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரப்பாவை டிஸ்மிஸ் செய்யும் கோரிக்கைகளும் வலுத்து வருவதால் அவரது நிலைமை தர்மசங்கடமாகியுள்ளது.
ரூ. 4 கோடி ஊரக வளர்ச்சிப் பணியை காண்டிராக்ட் எடுத்துள்ளார் சந்தோஷ் பாட்டீல். ஆனால் அதில் 40 சதவீத தொகையை தனக்கு கமிஷனாக வழங்க வேண்டும் என்று ஈஸ்வரப்பா நிர்ப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில்தான் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், சந்தோஷ் பாட்டீல் யார் என்றே தெரியாது என்று ஈஸ்வரப்பா மறுத்துள்ளார்.