டெல்லி : காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் இந்தியாவில் 40% கடற்கரைகள் மட்டுமே உறுதியாக இருக்கும் என்று ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல்களின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் குறிப்பாக மேற்கு கடற்கரையில் உள்ள 34% கடல் நீரால் அரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. மேற்கு வங்க கடற்கரை மிக அதிகமாக 60.5% அளவுக்கு கடலால் அரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கேரளாவின் கடற்கரை உறுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள கடற்கரைகளில் 6,907 கிமீ நீளம் கொண்ட கடற்கரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கடந்த 1990ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2,318 கிமீ நீளக் கடற்கரை கடலால் அரிக்கப்பட்டுவிட்டது. வெறும் 2,733 கிமீ நீளக் கடற்கரை மட்டுமே கடல் அரிப்பில் சிக்காமல் உறுதியாக நிலைத்துள்ளது. இந்த தகவல்கள் கடந்த நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடல் நீர் மட்டம் அதிகரிப்பது குறையவில்லை என்றால் மும்பை, நவி மும்பை கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள், 2030ம் ஆண்டுக்குள் கடல்மட்டத்திற்குள் கீழே சென்றுவிடும் என்று அஞ்சப்படுகிறது.