தமிழ்நாட்டில் இனி அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய மு.க.ஸ்டாலின், வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அம்பேத்கர். ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி அம்பேத்கர். வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’ அறிவித்தது போல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ சிலை நிறுவப்படும். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும்” என தெரிவித்தார்.