சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதம் வருமாறு:
வானதி சீனிவாசன் (பாஜக): சென்னை மேற்கு மாம்பலத்தில் கலாச்சார, ஆன்மிகவாதிகளால் நடத்தப்படும் அயோத்தியா மண்டபம், இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சமநீதியாக இருக்க வேண்டும்
சமூக நீதி என்றால் அது சமநீதியாக இருக்க வேண்டும். ‘இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சி’ என முதல்வர் அடிக்கடி கூறிவருகிறார். சமூக நீதி என்பதில் அந்த சமூகமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு: நீங்கள் இப்பேரவைக்கு புதிய உறுப்பினர். பேரவையில் நன்கு அனுபவம் வாய்ந்த உறுப்பினரான நயினார் நாகேந்திரனிடம் கலந்து பேசி, உரையாற்றும்போது, என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
முறைகேடு புகார்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: இந்த சமாஜம் 1958-ல் உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனர், சமாஜத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக 2004-ம் ஆண்டு முதல் புகார் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவற்றின் மீது 2013-ல் ஆய்வாளரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. சமாஜம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிராக உள்ளது என ஆய்வாளர் அறிக்கை அளித்தார்.
அதன்படி சமாஜத்துக்கு தேனாம்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் தக்காராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சமாஜத்தினர் மேல்முறையீடு செய்தனர். 2016-ல் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தக்கார் நியமனம் செல்லும் என்று கூறி உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
அதிகாரிகள் மீது கல்வீச்சு
நீதிமன்ற உத்தரவை அமலுக்கு கொண்டு வருவதற்காக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபம் சென்றனர். அங்கிருந்தவர்கள் பூட்டு போட்டு, உள்ளே செல்ல முற்பட்ட அதிகாரிகள் மீது கல்லெறிந்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து, தாசில்தார் வரவழைக்கப்பட்டு சமாஜம் தக்கார் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மக்களுக்காக அந்த சமாஜம் பயன்படவில்லை. பக்தர்கள் பணத்தை சுரண்டும் கூட்டம் ஒன்று அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அப்போது, குறுக்கிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதிலே தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இருந்தாலும், அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக தந்துள்ளார். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.
மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம்
இருப்பினும், பாஜகவைச் சேர்ந்த உறுப்பினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியாக, நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நமது மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம், குறிப்பாக பிரதமரிடம் நான் வலியுறுத்தி வந்துள்ளேன். எனவே, அதற்கு ஆதரவாக இருந்து அதைப் பெறுவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
நமது மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் நடக்க வேண்டும். தேவையில்லாமல் இதிலே அரசியலைப் புகுத்தி அதன்மூலம் நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.