சென்னை: தமிழக அரசுத் துறைகளில் 3 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், பணியாளர் தேர்வு முறையை மாற்றவும், பதவி உயர்வு அளிக்கவும் தனி குழு அமைத்து அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில், கிள்ளியூர் உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் பேசும்போது, ‘‘பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
டிஎன்பிஎஸ்சியை பொருத்தவரை 3 ஆண்டுகள் தேர்வு நடத்தப்படவில்லை. முன்னதாக பல வழக்குகள், குளறுபடிகள் உள்ளன.
எனவேதான் பட்ஜெட்டில், தேர்வு முறையை மாற்றுவது குறித்து கூறியுள்ளோம்.
90 வகை பணிகளுக்கான தேர்வுகள் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக தேர்வு முறை ஆய்வு செய்யப்படவே இல்லை.
இன்றைய சூழலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. சில இடங்களில் கூடுதலானவர்கள், சில இடங்களில் ஆட்களே இல்லாத நிலையும் உள்ளது. நிதிச்சுமையும் உள்ளது. எனவேதான், தேர்வுமுறை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி, பதவி உயர்வுஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களில் குழுவின் பரிந்துரைகள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.