மைக்ரோசாப்ட்
நிறுவனம் சமீபத்தில் தனது
விண்டோஸ் 11
பதிப்பை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு கணினியாக தனது புதிய பதிப்பை நிறுவனம் அப்டேட் மூலமாக வழங்கி வருகிறது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வெளியான விண்டோஸ் 11 பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் பதிப்பில் புதிய அம்சத்தை தற்போது நிறுவியுள்ளது. இந்த அம்சத்திற்கு மைக்ரோசாஃப்ட் பீக் என பெயரிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் MacOS கணினிகளில் உள்ள குயிக் லுக் போலவே இந்த அம்சம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் பீக்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேக் ஓஎஸ்ஸில் இருப்பது போன்ற பிரிவீவ் அம்சத்தை விண்டோஸ் 11 இயங்குதளத்தில் கொண்டு வரவுள்ளது. இந்த புதிய அம்சத்தின் உதவியுடன், ஒரு கோப்பை திறக்காமல் அதனை பிரிவீவ் செய்து பார்க்க முடியும். இதன்படி நாம் எந்த ஃபைலை பார்க்க விரும்பினாலும், கீபோர்டில் Shift + Spacebar ஆகிய கீகளை சேர்த்து அழுத்தினால், அந்த கோப்பின் பிரிவீவ் நமக்கு திரையில் காட்டப்படும்
இதில் சாதாரண ஃபைல்களை போல மீடியா ஃபைல்களையும் பிளே செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. மேக் ஓஎஸ் இயங்குதளத்தில் உள்ள குயிக் லுக் அம்சத்தில் நாம் பிரீவிவ் செய்யும் பைல்களை எடிட் செய்யவும் முடியும். அதுமட்டும் இல்லாமல் ஜூம் செய்யவும் முடியும். இந்த அம்சங்கள் மைக்ரோசாஃப்ட் பிரீவ்வில் இப்போதைக்கு இடம்பெறாது எனத் தெரியவந்துள்ளது.
இந்த அம்சம் வெளியாகும் தேதி குறித்து நிறுவனம் இன்னும் தகவல் வெளியிடவில்லை. பொதுவாக மைக்ரோசாப்டின் புதிய விண்டோஸ் 11 இயங்குதளம் பல இணைய செயல்பாடுகளுடன் வருகிறது. மேக் ஓஎஸ் போன்ற டாக், எளிதான கனெக்டிவிட்டி அம்சங்கள் இதன் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
ஆபத்தாகும் VLC மீடியா பிளேயர் – ஹேக்கர்கள் நோட்டமிடுவதாக தகவல்!
பாதுகாப்பை மேம்படுத்தும் மைக்ரோசாப்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிஷ்ஷிங் எனப்படும் இணைய தாக்குதல்களைத் தடுக்க புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை விண்டோஸ் 11 பயனர்களுக்கு வெளியிடவுள்ளது. இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த அம்சத்தினை கணினியில் ஆன் செய்து வைத்திருந்தால், ஹேக்கர்களிடம் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.
குறிப்பாக பிஷ்ஷிங் தாக்குதல்களை நடத்தும் இணையதளங்கள், புரோகிராம்கள் பயனர்களுக்கு காட்டப்படும். இதன்மூலம் ஆபத்தான இணையதளங்களை பயனர்கள் தவிர்த்துவிடலாம். அதேபோல மைக்ரோசாஃப்ட் புதிய தகவல் என்கிரிப்ஷன் அம்சத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறது.
இதன்மூலம் விண்டோஸ் பயனர்களின் சாதனங்கள் தொலைந்துபோனால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடி விடாமல் பயனர்களால் பாதுகாக்க முடியும். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள புதிய அம்சங்கள் விரைவில் பயனர்களுக்கு அப்டேட் மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.