ஏப்ரல்-13 உப்புச் சத்தியாகிரக நினைவு நாளையொட்டி, திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து வேதாரண்யத்திற்கு ‘உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை’யினை காங்கிரஸ் கட்சியினர் துவங்கினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் பேசுகையில், “உப்பு என்பது ஒரு அடையாளப் பொருள். உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்தார்கள். ‘என்னுடைய நாட்டிலே என்னுடைய கடல் நீரில் என்னுடைய உப்பு கலந்திருக்கிறது. அதை நான் எடுத்து உண்பதற்கு நீ வரி விதிப்பதற்கு உனக்கு என்ன அதிகாரம்’ என்று மகாத்மா காந்தி ஒரு எளிமையான கேள்வியைக் கேட்டார். இன்றைய காலக்கட்டத்தில் உப்புக்கு ஈடாக மதம், மொழி உடை, உணவு, பண்பாடு, பேச்சு, கலாசார பழக்க வழக்கம் ஆகியவை பிரச்னைக்குள்ளாகி நிற்கின்றன. அரசுக்கு அதிகாரம் தருவது மக்கள்தான். மக்களுக்கு உரிமையைத் தருவது அரசல்ல. ஆனால், ‘உங்களுக்கு எந்தளவிற்கு உரிமையைத் தரவேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ எனச் சொல்பவர்கள்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்கள். மொழி, உணவு, உடை, பண்பாடு, கலாசாரம், பேச்சு, எழுத்து ஆகிய அனைத்து சுதந்திரமும் நாள்தோறும் இந்த நாட்டிலே கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோகிறது” எனக் கொதித்தார்.
கே.எஸ்.அழகிரி பேசுகையில், “பாகிஸ்தானும், நாமும் ஒரே நேரத்தில்தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றோம். ஆனால், இந்தியா மட்டும் ஒரே நாடாக இருக்கு. பாகிஸ்தான் ஏன் ரெண்டு நாடாக போயிட்டுது. பாகிஸ்தானில் மிகப்பெரிய எண்ணிக்கையில் பேசக்கூடிய வங்காள மொழியை இரண்டாம் தர மொழியாக மேற்கு பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பஞ்சாப்பியர்கள் நடைமுறைப் படுத்தினார்கள். அதனுடைய விளைவாக அந்த நாடு இரண்டாக சிதறிப் போனது. பிரபஞ்சத்தில் வங்காள தேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது. மொழிதான் அதற்குக் காரணம். ஆனால், இந்தியாவில் மொழி வாரி மாகானங்களை ஜவஹர்லால் நேருவும், காங்கிரஸ் கட்சியும் உருவாக்கியதால் இன்றைக்கும் ஒரே இந்திய நாடு என்ற பெருமையை நாம் கொடுத்திருக்கிறோம். இன்னைக்கு அமித் ஷா அதை சிதைக்கப் பார்க்கிறார்” என்றார்.
திருநாவுக்கரசர் பேசுகையில், “ராகுல்காந்தி நிச்சயமாக நாட்டினுடைய பிரதமராக வருவார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். வேற வழியே கிடையாது. அவர் வந்தால்தான் காங்கிரஸைக் காப்பாற்ற முடியும். காந்தி இல்லாம நேரு இல்லாம காங்கிரஸூம் கிடையாது… இந்தியாவும் கிடையாது. அதேமாதிரி நேரு குடும்பம் இல்லாம காங்கிரஸூம் கிடையாது. மோடி – அமித் ஷாவை விரட்ட ஒரே வழி ராகுல் பிரதமர் ஆவது தான்” என்றார்.
கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “75 வருடங்களுக்கு முன்பு நாம் போராடி வாங்கிய சுதந்திரம் இன்றைக்கு சர்வாதிகாரிகளின் கையில் பிடிபட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த சுதந்திரத்தை திரும்ப வாங்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸிற்கு இருக்கிறது. மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து இருந்தார்களேயானால் கேரளா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் தனி நாடாகும். நம்மீதும், நம்முடைய மொழி, உணவு, உடை, கலாச்சாரம் மீதும் கை வைக்கிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ‘நீ இந்தியன் இல்லை’ என்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது அப்படிப்பட்ட இந்தியா எனக்கு தேவையில்லை என்று சொல்லத் தானே தோன்றும். கத்திரிக்காயையும், வெண்டைக்காயையும் எப்படி தூக்கி எறிகிறோமோ, அதேபோல அவர்களை (மோடி, அமித்ஷா) தூக்கியெறிய வேண்டும். வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் நாகரிமானவர்கள்.
ஆகவே நாம் சாத்வீக முறையில் போராடினோம். ஆனால், இந்த இரண்டு பேரும் அநாகரிகத்தின் உச்சம் மட்டுமல்ல, வன்முறையின் உச்சம். ஆகவே, சாத்வீக முறையில் போராடுகிற காங்கிரஸ்காரர்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என யாரும் தயவுசெய்து நினைத்துவிடக் கூடாது. எவ்வளவு பெரிய கஷ்டப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தினர் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தார்கள். அந்த தியாகத்திற்கு மதிப்பில்லாமல் இந்த நாடு சுக்குநூறாக உடைந்து போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால், அதை எப்பாடு பட்டாவது நாம் தடுக்க வேண்டும். ஆயுதம் எடுக்க வேண்டும் எனச் சொன்னாலும் எடுத்துத் தான் ஆக வேண்டும்” என்றார்.