நீடாமங்கலம் :
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில்(ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) உள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா 14-ந்(வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18-ந் தேதி முதல் 22 -ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனையும் நடக்கிறது.
குருபெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தால் ஆன பந்தல் அமைக்கப்படுகிறது. 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்படுகிறது. அடிப்படை வசதிகளை ஆலங்குடி ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் அறநிலைய உதவிஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்…
வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும்… விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களும்…