தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியானது சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மீண்டும் பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கமானது உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் போரானாது மேற்கொண்டு இதனை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
1991க்கு பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!!
பணவீக்கம் அதிகரிக்கலாம்
இதற்கிடையில் சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், பல முக்கிய நகரங்களில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் மூலதன பொருட்களின் விலையினை ஊக்கவிக்க காரணமாக அமையலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம்
இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதமானது மார்ச் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கமானது மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.85 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
இது தொடர்ந்து உணவு பொருட்களின் விலையானது அதிகரித்து வரும் நிலையில் உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பதற்றம், சீனாவின் லாக்டவுனினால் விலையேற்றம் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. மேலும் சர்வதேச அளவிலான தானிய உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சமையல் எண்ணெய் விலை, உரங்கள், ஏற்றுமதி உள்ளிட்டவற்றிலும் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டுள்ளது.
சப்ளையில் பாதிப்பு
கடந்த வாரத்தில் நடந்த ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் கவர்னர் சக்திகாந்த தாஸ், சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய கமாடிட்டி மற்றும் நிதி சந்தைகளில் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன என கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் அந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை, பல்லேடியம், அலுமினியம், நிக்கல், சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் என பலவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
விளாடிமிர் புதின்
இப்போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன. இதனையடுத்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மக்கள் விலைவாசி உயர்வினை எதிர்கொள்ளும்போதும் அது உள்நாட்டில் பெரும் பிரச்சனையை உருவாக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் கடினமான காலகட்டங்களில், ரஷ்ய மக்கள் எப்போதும் ஒன்று படுகிறார்கள் என்பதை தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
எலுமிச்சை & தக்காளி விலை
டெலில்லியில் சமீபத்தில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 300 – 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகின. குஜராத்தில் புயல் காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால் எலுமிச்சை வரத்து என்பது குறைவாக இருந்து. அதே சமயம் போககுவரத்து செலவுகள் அதிகரிப்பு காரணமாக செலவுகள் கூடின. இந்த காலகட்டத்தில் மற்ற பல பொருட்களின் விலையும் உயர்ந்தன. குறிப்பாக தக்காளி விலை கிலோவுக்கு 40 – 45 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோவுக்கு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சமையல் எண்ணெய் விலையும் இந்த காலகட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் விலை
உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் காரணமாக சமையல் எண்ணெய் விலையானது அதிகரித்துள்ளது. உக்ரைன் சன் பிளவர் ஆயில் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடு. இதற்கிடையில் தான் இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் எண்ணெய் விலையானது 18.79 சதவீதம் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் பணவீக்கமானது மார்ச் மாதத்தில் 11.64 சதவீதமாகவும் இருந்தது. அதேசமயம் இறைச்சி மற்றும் மீன் விலை உயர்வு விகிதம் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 9.63% ஆக அதிகரித்தது.
எரிபொருள் விலை
தற்போது எரிபொருள் விலையும் அதிகரித்துள்ள நிலையில், இது இன்னும் விலைவாசியினை தூண்டியுள்ளது. மார்ச் 22 முதல் 14 முறை எரிபொருள் விலையானது அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு தலா 10 ரூபாய் அதிகரித்துள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை 105.41 மற்றும் 120.51 ரூபாயாகவும் உள்ளன. இதே டீசல் விலையானது 96.67 மற்றும் 104.77 ரூபாயாகவும் உள்ளன. எனினும் கடந்த 7 நாட்களாக எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேஸ் விலையும் அதிகரிப்பு
மார்ச் 31 அன்று இயற்கை எரிவாயு விலையும் அதிகரிக்கலாம் என்று கூறிய நிலையில், ஏப்ரல் முதல் புதிய விலையும் அமலுக்கு வந்துள்ளது. இது கடந்த 2014ல் இருந்து பார்க்கும்போது உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் வணிக சிலிண்டர்களுக்கான விலையும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் 250 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதுவும் வணிகர்களுக்கு செலவினை அதிகரிக்கலாம்.
குறைக்குமா?
ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் ரஷ்யாவிடம் இருந்து, எண்ணெய் இறக்குமதியினை குறைக்குமாறு இந்தியாவினை வலியுறுத்தியுள்ளன. மற்ற இறக்குமதி நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது குறைவு தான் என்றாலும், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதாக ரஷ்யா இந்தியாவினை அணுகி வருகின்றது.
என்ன பிரச்சனை?
ஏற்கனவே நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் பல பொருட்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதற்கிடையில் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது, போக்குவரத்து செலவினை அதிகரித்துள்ளது. இது இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். மொத்ததில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, சீனா லாக்டவுன் என்பது உள்ளிட்ட சில பிரச்சனை எப்போது முடியும் என்ற தெளிவில்லாத நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினையே ஊக்குவிக்கலாம். இது சாமானியர்களின் பாக்கெட்டுகளையே மீண்டும் பதம் பார்க்கலாம்.
வட்டி அதிகரிக்கலாம்
வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகளாவது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே எஸ்பிஐ 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கினை தாண்டி பணவீக்கம் 6.95% ஆக அதிகரித்துள்ளது. ஆக ஜூன் மாதம் நடக்கும் கூட்டத்தில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவ மழை
இந்தியாவில் பருவ மழையிலும் இந்த ஆண்டு தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல், சோளம், கரும்பு, பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பயிர்கள் பருவ மழையினையே நம்பியுள்ளன. ஆக இது சரியாக இருக்கும் பட்சத்தில் உற்பத்தி அதிகரிக்கலாம். இது பணவீக்கத்தினை சற்று குறைக்கலாம். எனினும் உக்ரைன் போர் முடிவு, இதன் காரணமாக சப்ளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறையும்போது பணவீக்கம் ஓரளவுக்கு குறையலாம்.
how the rise global inflation will impact on india?
how the rise global inflation will impact on india?/இந்தியாவினை பயமுறுத்தும் பணவீக்கம்.. சாமானியர்களுக்கு என்ன பிரச்சனை?