இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை தலைநகர் கொழும்புவில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அந்நாட்டு மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். பால் முதல் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் வரை அனைத்தும் கடுமையான விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்புவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நடிகர் விஜய்யின் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு டிக்கெட்டின் விலை 850 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக அந்நகரில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு இருக்கும் நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஒன்றுதான் குறையா? என்றும், வடிவேல் காமெடி வசனம் இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேக்குதோ? என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.