இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது அமலாக்கத்துறை. பல மாதங்கங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிருக்கிறது.
இந்த நிலையில், இடைத்தரகர் சுகேஷ் யார்? தினகரன் சிக்கினாரா இல்லை… சிக்கவைக்கப்பட்டாரா? போன்ற கேள்விகளை அ.ம.மு.க மூத்த நிர்வாகியும், வழக்கறிஞருமான ஒருவரிடம் கேட்டோம். பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசத்தொடங்கினார். “வழக்குக் குறித்து அறிந்துகொள்ள சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஜெயலலிதா மறைந்த பின்னர் பன்னீர் தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது கட்சி பிளவுபட்டு இரண்டு அணிகளாகப் பிரிந்தது. அதனால், கட்சியின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட சின்னத்தை மீட்க விரும்பிய டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட தினகரன், சிலகாலம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் பின்னர் வெளிவந்தார். பலகாலம் தூங்கிக்கொண்டிருந்த வழக்கை தற்போது தூசுதட்டியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
ஏப்ரல் 12-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற டி.டி.வி.தினகரனிடம் 11 மணிநேரம் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை விசாரணையைப் பொறுத்தவரை எல்லாமே கேள்வி-பதில் வடிவில்தான் இருக்கும். தங்கள் பெயர் என்ற கேள்வியில் ஆரம்பித்து வழக்குத் தொடர்பான கேள்விகள் வரை பரீட்சை போல நூற்றுக்கணக்கான கேள்விகள் கொண்ட தாள்களைக் கொடுத்து விடுவார்கள். அதில் நாம் பதில்களை எழுதிக்கொடுக்க வேண்டும். இரட்டை இலை ஏன் முடக்கப்பட்டது? அதை மீட்க முயற்சி செய்தது உண்மையா? சுகேஷ் யார்? சுகேஷிடம் யார் மூலம் பேசினீர்கள்? சுகேஷை நேரில் சந்தித்திருக்கிறீர்களா? என்றுதான் பல கேள்விகள் இருந்தன. பெரும்பாலானக் கேள்விகளுக்குத் தெரியாது என்றே பதிலளித்திருக்கிறார் தினகரன்.
சரி, அடுத்து சுகேஷ் யார் என்பதைப் பார்ப்போம். சுகேஷ் ஒரு சர்வதேச ஏமாற்றுப் பேர்வழி. 10 நிமிடங்கள் அவருடன் ஒரு தலைவர் பேசினார் என்றால், அவரது பேச்சில் மயங்கிவிடுவார். அந்தளவுக்கு கவரக்கூடிய வகையில், நுனிநாக்கு ஆங்கிலத்தில், நம்பும் வகையில் பேசுவார் சுகேஷ். பல அரசியல் வி.வி.ஐ.பி-க்களின் பெயர்களைச் சொல்லி பலரிடம் பணத்தை ஏமாற்றியிருக்கிறார். இரட்டை இலை வழக்கில் சிறையில் இருந்துகொண்டே, இன்னொரு சகோதரர்கள் அடங்கிய குடும்பத்தை ஏமாற்றி 215 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக ஒரு வழக்கு பதிவானது.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்காக ஆஜரான வழக்கறிஞர்களில் முக்கியமானவர் ப.குமார் என்கிற சீனியர் வழக்கறிஞர். அணிகள் பிரிந்திருந்த சமயத்தில், ராம்விலாஸ்பாஸ்வான் மகன், சிராக் பாஸ்வான் மூலமாக, சுகேஷ் ப.குமாரின் தொடர்பில் சென்றதாகக் கூறப்படுகிறது. ப.குமாரின் மொபைலில் இருந்துதான் தினகரனிடம், சுகேஷ் பேசியிருந்தார். எனினும், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக சுகேஷிடம், தினகரன் பணம் கொடுத்ததற்கான சாட்சியங்களோ, ஆதாரங்களோ ஒன்றுமே இல்லை. அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை, வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தால்தான் அதனை ஆதாரமாகக் காட்ட முடியும். கையில் பணம் கொடுத்தார் என யார் வேண்டுமானாலும், யார் மீதும் புகார் சொல்லலாம். இந்த வழக்கில் வங்கிப் பரிவர்த்தனைக்கான எந்தவித ஆதாரங்களும் சிக்கவில்லை.
இதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்ல முடியும். சஹாரா குழுமம் வழக்கு இந்தியாவிலேயே பிரபலமான வழக்குகளில் ஒன்று. யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து டைரியில் எழுதப்பட்டப் பெயர்களை வைத்துதான் வழக்கே நடந்தது. அதனை ‘சஹாரா டைரி’ என்றே சொல்வார்கள். அதில், முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி உள்ளிட்ட வி.வி.ஐ.பி பெயர்களும், அதற்கு அருகில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் குறித்தத் தகவலும் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தது. ‘வெறும் டைரியில் இருக்கும் பெயர்களை வைத்தெல்லாம் யாரையும் சந்தேகப்பட முடியாது, எந்த வழக்கிலும் டைரியில் எழுதப்பட்டதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனால், இரட்டை இலை வழக்கிலும் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதை வங்கிப் பரிவர்த்தனை மூலம் நிரூபிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் இந்த வழக்கு நிற்காது. இது தினகரனை அச்சுறுத்துவதற்கான ஒரு ஏற்பாடே அன்றி வேறில்லை!” என்று முடித்தார்.