இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ படம் ரிலீசாகி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘பீஸ்ட்’ படம் உலகம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழால் இணைவோம்-அனிருத், சிம்பு டுவிட்டர் பதிவு
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் “தமிழால் இணைவோம்” என்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.
இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமித்ஷா கூறியிருந்தார்.
மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார். தற்போது நடிகர் சிலம்பரசன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தமிழால் இணைவோம் என்று பதிவு வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு நடிகருக்கு அபராதம்
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாக சைதன்யா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கு படவுலகில் பிரபல நடிகரான நாகார்ஜுனின் மகன் மற்றும் நடிகரான நாக சைதன்யா டொயோட்டா கார் ஒன்றில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியே சென்றுள்ளார்.
அவரது காரை சோதனை சாவடியில் வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். இதில், அவரது காரில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கும்படி அவரிடம் கூறியுள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.715 அபராதமும் விதிக்கப்பட்டது.
போலீசார் பின்பு கருப்பு ஸ்டிக்கரை நீக்கினர். இதனை தொடர்ந்து செலான் தொகையை போலீசாரிடம் நாக சைதன்யா கட்டி விட்டு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, கருப்பு ஸ்டிக்கரால் காரில் இருப்பது யார் என தெரியாத சூழலில், வாகனத்திற்குள் நடைபெறும் மறைமுக குற்றங்களை குறைக்கும் நோக்கில் இதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா… வைரலாகும் விஜயின் இந்தி குறித்த வசனம்
தனுஷுக்கு ஜோடியான ஸ்வீடன் நடிகை
நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என சுவீடன் நடிகை எல்லி அவ்ரம் தெரிவித்து உள்ளார்.
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இதனால், நானே வருவேன் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நானே வருவேன் படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக, சுவீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரமை தேர்வு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. ஆனாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பதை எல்லி அவ்ரம் உறுதிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பில் தனுசுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட எல்லி அவ்ரம், “நானே வருவேன் படத்தில் நான் நடித்த காட்சிகள் முடிந்துவிட்டன. திறமையான நடிகர் தனுஷ், புத்திசாலித்தனமான இயக்குனர் செல்வராகவன் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil