இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். விலைவாசி அதிகரித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அதிபரை எதிர்த்து இலங்கை மக்கள் விடிய விடிய கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் எதிர்க்கட்சிகள் அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மாற்றம் இல்லாமல் நாங்கள் நிறுத்த மாட்டோம். அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 20-வது சட்ட திருத்தத்தை மாற்றியமைத்து, இலங்கை அதிபரின் அதிகார வரம்பை குறைக்க சட்ட திருத்தம் மேற்கொள்ள கோரும் தீர்மானமும் கொண்டு வரப்படவுள்ளது” எனப் பதிவிட்டிருக்கிறார்.