கொழும்பு :இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானம் ஆகியவற்றில் எதிர்க்கட்சியினர் நேற்று கையொப்பமிட்டனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.பிரதமர் அலுவலகம்அருகே நடக்கும் இந்தப் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இந்நிலையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சு நடத்த தயார்’ என, பிரதமர் மகிந்த நேற்று தெரிவித்தார்.பிரதமரின் அழைப்பை ஏற்க போராட்டக்காரர்கள் தரப்பு மறுத்துவிட்டது.இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக பார்லி.,யில்
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியினர் தயாராகி விட்டனர்.
இலங்கை பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்வதற்கு முன், அதில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 40 உறுப்பினர்களின் கையொப்பம் பெற வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பாலவேகயா கட்சியை சேர்ந்த 50 உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானத்தில் நேற்று கையொப்பமிட்டனர்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக மேலும் பல கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட இருப்பதாக கூறப்படுகிறது.
தீர்மானத்தில் கையொப்பமிட்ட சமாகி ஜன பாலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ”நாட்டில் மாற்றம் நிகழாமல் எங்கள் போராட்டம் முடிவுக்கு வராது,” என்றார்.
Advertisement