இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகம் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்காமை மற்றும் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றாமை ஆகியனவே நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணம் என புலம்பெயர் தமிழர்கள் பிரச்சாரம் செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு சம்பளங்களை அதிகரிக்கவும், முன்னாள் படையதிகாரிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கவும் நாட்டின் பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகிய விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்த இராணுவத்தை அரசாங்கம் அனுப்பிய போது தெற்கின் சிங்கள மக்கள் குரல் எழுப்பவில்லை என தமிழ் அரசியல்வாதியொருவர் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.