பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது லஞ்ச புகார் கூறி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தனது முடிவுக்கு ஈஸ்வரப்பாவே காரணம் என எழுதிய தற்கொலை குறிப்பும் கிடைத்தது. தன் மீதான புகாருக்கு ஈஸ்வரப்பா மறுப்பு தெரிவித்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூங்கியதால் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வரப்பா மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக உடுப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார் ஆளுநரை நேரில் சந்தித்தனர். அப்போது ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி அவரிடம் மனு அளித்தனர். அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு முதல்வர் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.