குத்தாலம் ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக் குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதிகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கித் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் தொன்மையான நம்பிக்கையாகும்.
இத்தலத்தில் சிவபெருமான், பார்வதிதேவியைத் திருமணம் செய்து கொள்வதற்காகக் கயிலாயத்திலிருந்து வந்தபோது அவருக்கு நிழலாக உத்தால மரத்தைக் குடையாகப் பிடித்து வந்ததாகவும், திருக்கல்யாணம் முடிந்து சுவாமி, அம்பாள் கயிலாயம் செல்லும்போது சுவாமி இத்தலத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும் விட்டுச் சென்றதாகவும் தலவரலாறு கூறுகிறது. இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது. இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதக் கடைசியிலும், சித்திரை மாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம்.
இவ்வாண்டு நேற்று முதல் உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து தரிசித்துச் செல்கின்றனர். இந்த உத்தால மலர் ஐந்து விதமான இதழ்களையும், ஐந்து வகையான சுவைகளையும் உடையது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மரத்தின் இலை, பூ, காய் என மனிதர்களின் சகல நோய்களையும் தீர்க்க வல்லது என்பது நம்பிக்கை. குறிப்பாகத் தோல் வியாதி உள்ளவர்கள் இதன் இலைகளை உட்கொள்கிறார்கள். இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்குமில்லை குறிப்பிடத்தக்கது.