புதுடெல்லி: உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) அனுமதி அளித்தால் உலக நாடுகளுக்கு நாளை முதல் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யத் தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நேற்று 48-வது நாளை எட்டியது. இந்த போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
இதற்கிடையில், பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா-உக்ரைன் விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணா தாம் டிரஸ்டின் புதிய விடுதி மற்றும் கல்வி வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இன்றைய உலகம் நிலைத்த தன்மையற்ற சூழ்நிலையை சந்தித்து வருகிறது. யாரும் அவரவர் விரும்பியதைப் பெறுவதில்லை. அனைத்து வழிகளும் மூடப்படுவதால் பெட்ரோல், எண்ணெய், உரங்களை கொள்முதல் செய்வதுகடினமான விஷயமாக அமைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது முதல் அனைத்து நாடுகளும் தங்களிடம் உள்ள பொருட்களை பாதுகாத்து வைக்க நினைக்கின்றன.
உலகம் தற்போது புதிய பிரச்சினையை சந்தித்துள்ளது. உலகில் உள்ள உணவுப் பொருட்கள் கையிருப்பு தீர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபருடன் (ஜோ பைடன்) நான் பேசியபோது அவரும் இந்தப் பிரச்சினை குறித்து பேசினார். உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால் நாளை முதல் உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய இந்தியா தயார் என நான் அவரிடம் தெரிவித்தேன்.
நமது மக்களுக்கு உணவு வழங்க ஏற்கெனவே நம்மிடம் போதிய உணவு உள்ளது. ஆனால், நமது விவசாயிகள் உலகுக்கு உணவுப் பொருட்கள் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், உலக சட்டவிதிகளை நாம் பின்பற்ற வேண்டும். உலக நாடுகளுக்குஉணவு விநியோகம் செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு எப்போது அனுமதியளிக்கும் என எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.