குவாஹாட்டி: ஜெர்மனியைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான டார்னியரு டன் மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி எச்ஏஎல் நிறுவனம், டார்னியர் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே விமானங்களை தயாரிக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான அலயன்ஸ் ஏர் நிறுவனம், 2 டார்னியர் 228 ரகவிமானங்களை குத்தகைக்கு எடுக்க எச்ஏஎல் நிறுவனத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2 விமானங்கள் கடந்த 7-ம் தேதி அலயன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், டார்னியர் விமானத்தின் வர்த்தக ரீதியிலான முதல் சேவையை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இந்த விமானம் அசாம் மாநிலத்தின் திப்ருகாரிலிருந்து அருணாச்சல பிரதேச மாநிலம் பசிகாட் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.