சென்னை: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும், மக்களோடு மக்களாக இருந்து பொறுப்புடன் செயல்படுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாண்புமிகு மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக் கான நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருங்கள். எந்தவித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. பெரும்பாலான மேயர், நகர்மன்றத் தலைவர்கள் இளம் வயதினராக இருக்கின்றனர்.
முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான்தான். `உனக்கு மக்கள் கொடுத்தது மேயர் பதவி இல்லை, மேயர் பொறுப்பு’ என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிஎன்னிடம் தெரிவித்தார். அவர் கூறியதுபோல் நீங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியைப் பதவியாக நினைக்காமல், பொறுப்பாகக் கருதி செயல்பட வேண்டும். மேயர், துணை மேயர் அனைவரும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி என்பதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதை நீங்கள் செயல்படுத்திக் காட்டவேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாக செலவிடப்படுவதை கண்காணிக்க வேண்டும். மக்களுடைய குறைகளை உடனடியாக கேட்டு சரி செய்ய வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும். மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருப்பவர்கள் கவுன்சிலர்கள். அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு கூறினார்.