கிறிஸ் ராக் ஆஸ்கர் சம்பவத்துக்குப் பிறகு அதனைப் பற்றி விரிவாக எங்கும் பேசவில்லை. இத்தனைக்கும் `Ego Death World Tour’ என்கிற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளைப் பல நகரங்களில் நடத்திவருகிறார். வில் ஸ்மித் கிறிஸைத் தாக்கிய சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. நடுவில் ஒரு முறை மட்டுமே அதனைப் பற்றி காமெடி நிகழ்ச்சிக்கு நடுவில் பேசினார் கிறிஸ் ராக். தற்போது கலிபோர்னியாவில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் தான் ஏன் அதைப் பற்றிப் பேசுவதில்லை என விளக்கியுள்ளார் கிறிஸ்.
“நான் ஓகே. எனக்கு முழு நிகழ்ச்சி இருக்கு, அதனைப் பற்றி பேச வேண்டுமானால் யாராவது பணம் கொடுத்தால் நான் பேசுகிறேன்” என ஜோக் அடித்துள்ளார் கிறிஸ் ராக். “வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருக்கு. என்னுடைய தரப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முன்பு ஒரு காமெடி நிகழ்ச்சியில் அந்த சம்பவத்தில் இருந்து தான் இன்னும் அதிலிருந்து மீளவில்லை என குறிப்பிட்டு இருந்தார். வில் ஸ்மித் ஆஸ்கர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறியதும், ஆஸ்கர் அமைப்பு அடுத்த 10 வருடங்களுக்கு எந்தவித ஆஸ்கர் விழாக்களிலும் கலந்து கொள்ள தடை விதித்ததும் கடந்த வாரத்தில் நடந்தன. கிறிஸ் ராக் தன்னுடைய தரப்பை முன்வைத்து விரிவாக பேச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.